October 2025

                                                     தெற்கு மண்டலம்



அக்டோபர் : 17 ஜப்லா பணித்தளத்தில் ‘மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளின் கீழ் மூன்று நாட்கள் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 120 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்; இக்கூட்டங்களில், ராஞ்சியைச் சேர்ந்த சகோ. விக்கி கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, இப்பணித்தளத்தில் நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 150 விசுவாசிகள் கலந்துகொண்டு, இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களுக்காகவும் மற்றும் தேசம் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் பாரத்துடன் ஜெபித்தனர். இரட்சிக்கப்படாத வாலிபர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும், தங்கள் பாவ வழிகளிலிருந்து மனந்திரும்பவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 18 சத்தர்பூர் பணித்தளத்தில் செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 150 விசுவாசிகள் கலந்துகொண்டு, பணித்தள ஊழிங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். தொடர்ந்து, செப்டம்பர் 4 அன்று இப்பணித்தளத்தில் நடைபெற்ற மண்டல கன்வென்ஷன் கூட்டத்தில் 150 பேர் கலந்துகொண்டு கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டனர். செப்டம்பர் 18 அன்று இப்பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் 70 பேர் கலந்துகொண்டனர். வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 19 ஹைதர்நகர் பணித்தளத்தில் ‘தடைகளைத் தகர்ப்போம்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும், தொடர்ந்து, செப்டம்பர் 12 அன்று மகுவாதத் பணித்தளத்திலும், செப்டம்பர் 16 அன்று போஜைகா மற்றும் சீகோய் பணித்தளங்களிலும், செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தினங்கள் ஜப்பன் பணித்தளத்திலும் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளில் 359 பேர் கலந்துகொண்டு பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காக ஒருமனதுடன் ஜெபித்தனர். விசுவாசிகள் மத்தியில் ஜெப வாஞ்சை பெருகவும், விசுவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 20 செப்டம்பர் 2 அன்று கட்டோலி பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் ஜெபக் கூட்டத்தில் 63 விசுவாசிகளும் மற்றும் பட்கோய் பணித்தளத்தில் செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 30 விசுவாசிகளும் கலந்துகொண்டு, தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபித்தனர். பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும், ஜனங்கள் விடுதலையோடு கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 21 கும்லா பக்கர்டோலி பணித்தளத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தினங்கள் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில், ‘சாட்சியான கிறிஸ்தவ வாழ்க்கை’ என்ற தலைப்பின் கீழ் சகோ. வென்னிலவன் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார்; இக்கூடுகையில், 72 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பணித்தளங்களில், வாலிபர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தர ஜெபிப்போம்.