October 2025

                                                     தெற்கு மண்டலம்



அக்டோபர் : 17 ஜப்லா பணித்தளத்தில் ‘மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளின் கீழ் மூன்று நாட்கள் நடைபெற்ற வாலிபர் கூட்டத்தில் 120 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்; இக்கூட்டங்களில், ராஞ்சியைச் சேர்ந்த சகோ. விக்கி கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, இப்பணித்தளத்தில் நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 150 விசுவாசிகள் கலந்துகொண்டு, இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களுக்காகவும் மற்றும் தேசம் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் பாரத்துடன் ஜெபித்தனர். இரட்சிக்கப்படாத வாலிபர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும், தங்கள் பாவ வழிகளிலிருந்து மனந்திரும்பவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 18 சத்தர்பூர் பணித்தளத்தில் செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 150 விசுவாசிகள் கலந்துகொண்டு, பணித்தள ஊழிங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். தொடர்ந்து, செப்டம்பர் 4 அன்று இப்பணித்தளத்தில் நடைபெற்ற மண்டல கன்வென்ஷன் கூட்டத்தில் 150 பேர் கலந்துகொண்டு கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டனர். செப்டம்பர் 18 அன்று இப்பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் 70 பேர் கலந்துகொண்டனர். வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 19 ஹைதர்நகர் பணித்தளத்தில் ‘தடைகளைத் தகர்ப்போம்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும், தொடர்ந்து, செப்டம்பர் 12 அன்று மகுவாதத் பணித்தளத்திலும், செப்டம்பர் 16 அன்று போஜைகா மற்றும் சீகோய் பணித்தளங்களிலும், செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தினங்கள் ஜப்பன் பணித்தளத்திலும் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளில் 359 பேர் கலந்துகொண்டு பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காக ஒருமனதுடன் ஜெபித்தனர். விசுவாசிகள் மத்தியில் ஜெப வாஞ்சை பெருகவும், விசுவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 20 செப்டம்பர் 2 அன்று கட்டோலி பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் ஜெபக் கூட்டத்தில் 63 விசுவாசிகளும் மற்றும் பட்கோய் பணித்தளத்தில் செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 30 விசுவாசிகளும் கலந்துகொண்டு, தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபித்தனர். பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும், ஜனங்கள் விடுதலையோடு கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 21 கும்லா பக்கர்டோலி பணித்தளத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தினங்கள் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில், ‘சாட்சியான கிறிஸ்தவ வாழ்க்கை’ என்ற தலைப்பின் கீழ் சகோ. வென்னிலவன் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார்; இக்கூடுகையில், 72 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பணித்தளங்களில், வாலிபர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தர ஜெபிப்போம். 



 

SEP 2025

                                          தெற்கு மண்டலம்

செப்டம்பர் 16  ஜார்ஹா மற்றும் லடாக் பணித்தளங்களில் 130 சிறுவர் சிறுமியருக்கு வசனங்கள் மற்றும் வேதாகம கதைகளின் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். மேலும், டோர்பா,  லோஹிங்கா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற ஜெபக்கூடுகைகளையும், போச்ரா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாச கூடுகையினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். இப்பணித்தளங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஞாயிறு பள்ளிகளுக்காக ஜெபிப்போம்.

செப்டம்பர் 17 ஆகஸ்ட் 23 அன்று ஹைடர்நகரில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 90 பேர் பங்கேற்றனர். சகோ. சுரேந்தர், சகோ. சஞ்சய், சகோ. க்யான் ஆகியோர் “பலவானுக்கு” என்ற தலைப்பின்கீழ் வேத வசனங்களைப் பகிர்ந்துகொண்டனர். சத்தர்பூர் மற்றும் மஜியாவ் பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். அன்பரா பணித்தள ஊழியர்களுக்காகவும் மற்றும் வேலை இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 18 கார்கட்டா கிராமத்தில் வீட்டுக் கூட்டத்தினையும், ஜப்லா மற்றும் சத்தார்பூர் பகுதிகளில் இரவு ஜெபக் கூட்டங்களையும் நடத்த கர்த்தர் உதவி செய்தார்.  ஆகஸ்ட் 20 அன்று முகம்மத்கஞ்ச் மிஷன் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 64 பேர் பங்கேற்றனர். இப்பணித்தள ஊழியர்களுக்காகவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் விசுவாசிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 19 ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் பகர்தோலி பணித்தளத்தில் “தடைகளை உடைத்திடுவோம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் 210 பேர் பங்கேற்றனர்.தசாரா, மஜியாவ், முகம்மத்கஞ்ச் மிஷன் ஆகிய பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட தசரா,  மஜியா, முகமத்கஞ்ச் ஆகிய பணித்தளங்களில் 16 பேரும், தேவ்காவ் பகுதியில் 19 பேரும், சிதி பகுதியில் 11 பேரும் உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். டோர்பா, லோஹிங்கா, பூர்குண்டா, கடுரு, ஹிந்த்காரா ஆகிய பணித்தளங்களில் ஆலயம் கட்டப்பட எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்காக ஜெபிப்போம்.

செப்டம்பர் 20 வைதான், சிதி, தேவ்காவ், மணிக்வார் ஆகிய பணித்தளங்களில் குடும்பக் கூடுகைகளை நடத்தவும், தேவ்காவ் பணித்தளத்தில் மூன்று நாட்கள் உபவாசக் கூடுகையில் 100 பேரும், சிதி பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 125 பேரும் பங்கேற்றனர். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரர் சந்தோஷ், வுடீ நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் சிந்தாமணி சாகேத் மற்றும் தீய ஆவிகளால் கட்டுப்பட்டிருந்த சகோதரி புட்டி சாகேத் மற்றும் ராஜேந்திர கேர்வார் ஆகியோர் ஜெபத்தின் மூலம் சுகம் பெற்றனர்; தேவனுக்கே மகிமை! சரீர சுகம் பெற்றவர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கவும், அவர்களது குடும்பத்தினர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும், இவர்கள் தொடர்ந்து ஆலய ஆராதனையில் பங்கேற்கவும் ஜெபிப்போம்.









August 2025

                                                       தெற்கு மண்டலம்

ஆகஸ்ட் 17 ஜார்க்கண்ட் மாநிலத்தின் கடுவா, சாங்க்ரே, தசரா, பொகாரியா, நகருந்தரி ஆகிய பணித்தளங்களிலும் மற்றும் தசரா, ஜப்லா பணித்தள பகல்நேரப் பராமரிப்பு மையங்களிலும் நடைபெற்ற சிறுவர் ஊழியத்தின் மூலம் 231 குழந்தைகளுக்கு வேதாகமக் கதைகள் மற்றும் வசனங்கள் கற்பிக்கப்பட்டன. சதர்பூரில் நடைபெற்ற மறுமலர்ச்சிக் கூட்டங்களில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில், சகோ.  ஸ்டீபன் மற்றும் சகோ. சரவணன் ஆகியோர் "சேவை செய்" என்ற தலைப்பில் தேவச் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர்.  

ஆகஸ்ட் 18 ஜப்லா, பர்கோஹி மற்றும் சத்தர்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் 230 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேசத்திற்காகவும், பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபித்தனர். மேலும், ஹட்டுக்டாக் மற்றும் முகமதுகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 90 பேர் பங்கேற்று தேசத்திற்காக ஜெபித்தனர். இக்கூட்டங்களில், சகோ.  மகேந்தர், சகோ.  சஞ்சய் மற்றும் சகோ.  மார்ட்டின் ஆகியோர்  தேவச் செய்திகளை அளித்து ஜனங்களை ஜெபத்தில் வழி நடத்தினர்.

ஆகஸ்ட் 19 ஜப்லா, கும்லா, மெரல் மற்றும் கடுவா ஆகிய பணித்தளங்களில், சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து, இயேசுவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட 25 பேர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேல் உள்ள தங்கள் விசுவாசத்தை உடன் சகோதரருக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! 

ஆகஸ்ட் 20 புர்குண்டா பணித்தளத்தில், புதிதாக இரண்டு குடும்பங்கள் தவறாமல் ஆலய ஆராதனையில் கலந்து கொண்டு, தங்கள் விசுவாசத்தில் வளர்ந்து வருகின்றன.

ஆகஸ்ட் 21 போர்பா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபருக்கான சிறப்பு முகாமில் 80 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பாடல்கள், ஆராதனைகள், விளையாட்டுகள் மற்றும் வாலிபத்திற்கு ஏற்ற ஆலோசனைகளுடன், தேவச் செய்தியையும் ஊழியர்கள் பகிர்ந்துகொண்டனர். ஜெப வேளையின்போது, அநேக வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்ததோடு, அவருக்காக ஊழியம் செய்யவும் தங்களை அர்ப்பணித்தனர். 12 இடங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களில் வாயிலாக ஆயிரத்திற்கும் மேற்பட்டச் சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. 


July 2025

                                                      தெற்கு மண்டலம்




ஜுலை 17 பக்கர் டோலி, சொர்குடா மற்றும் குட்டுவாபனிடால் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட விடுமுறை வேதாகமப்பள்ளி ஊழியங்களின் மூலமாக, 316 சிறுவர்  சிறுமியருக்கு, கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், தொடர்ந்து, ஹைதர் நகர்,மியாவோ,முகமத்கஞ்ச்,ஜப்லா மற்றும் சகிதாபாத் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக 604 சிறுவர் சிறுமியரைச் சந்தித்து கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இச்சிறு பிள்ளைகளின் மூலமாக அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஜெபிப்போம். 

ஜுலை 18 பணித்தளங்களில், புதிதாக இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களுக்காக நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 30 விசுவாசிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படைச் சத்தியங்களைப் போதித்து, அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிக்க கர்த்தர் உதவிசெய்தார். சமுதாயத்தில் இவர்கள் கிறிஸ்துவுக்காக எழுந்து பிரகாசிக்கவும், தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், குடும்பத்தாருக்கு சாட்சியாக விளங்கவும் ஜெபிப்போம்.  

ஜுலை 19 ஜப்லா பணித்தளத்தில், ஜுன் 1 அன்று நடைபெற்ற முழு இரவு ஜெபத்தில் 200 பேர் கலந்துகொண்டு, பணித்தள மக்களுக்காகவும், பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். தொடர்ந்து, ஜுன் 4 மற்றும் 5 ஆகிய தினங்கள், ஜப்லா மற்றும் சத்தர்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்களில் 120 பேரும், மற்றும் ஜுன் 11 மற்றும் 13 ஆகிய தினங்கள் கட்டோலி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 50 பேரும் கலந்துகொண்டனர். பணித்தள விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் மற்றும் ஆத்துமபாரத்திலும் வளரவும், தங்கள் குடும்பத்தினரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தவும் ஜெபிப்போம்.   

ஜுலை 20 பிஞ்சரடிப்பா பணித்தளத்திற்குட்பட்ட மட்கடியா கிராமத்தில் நடைபெற்ற சகோதரர் சுதின் கடியாவின் குழந்தை அர்ப்பணிப்பு ஆராதனை, குடும்பத்தாருக்கும் மற்றும் அக்கிராமத்து மக்களுக்கும் ஆசீர்வாதமாக அமைந்தது. இவ்வாராதனையின்போது, குழந்தையை அர்ப்பணிக்கவும் மற்றும் கலந்துகொண்ட மட்கடியா கிராமத்தினர் 30 பேருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். இக்கிராமத்தினரின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.  

ஜுலை 21 ஜப்பன் பணித்தளத்தில், 70 பேரைச் சந்தித்து கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்கவும் மற்றும் அவர்களுக்கு ஒருவேளை ஆகாரம் அளிக்கவும் மற்றும் ஜுன் 15 அன்று துசேரா பணித்தளத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் மூலமாக 100 பேருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் சுவிசேஷத்திற்கு வரும்நாட்களில் திறந்த வாசல் உண்டாகவும், இப்பணித்தளத்தில் முன்னெடுக்கப்படும் நற்செய்திப்பணிகள் பலன்களைத் தரவும் ஜெபிப்போம். 


June 2025

                                                     தெற்கு மண்டலம்



🔊தேவ்கான் பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 35 விசுவாசிகள் கலந்துகொண்டனர். திருச்சபையிலும் மற்றும் குடும்பத்திலும் பெண்கள் நிறைவேற்றவேண்டிய பங்கினைக் குறித்தும் மற்றும் சமுதாயத்தில் அவர்கள் மூலமாக  உருவாகும் தாக்கத்தினைக் குறித்தும் வேத வசனங்களின் அடிப்படையில் போதிக்கப்பட்டதுடன், வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தேவ்கான் மற்றும் சித்தி பணித்தளங்களில் நடைபெற்ற சபை மூப்பர்களுக்கான சீஷத்துவ மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கானப் பயிற்சியிலும் 80 பேர் பங்கேற்றனர். 

🔊 இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 32 பேர், உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மீது உள்ள தங்களது அன்பையும் மற்றும் விசுவாசத்தையும் சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!

🔊 ஹைதர்நகர்  பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கானக் கூடுகையில் 14 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, இப்பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும் 28 பேர் கலந்துகொண்டு பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.

🔊 ஜப்லா மற்றும் சதர்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற இரவுக் கூடுகையில் 200 பேர் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழியங்களுக்காகவும் ஊக்கமாக ஜெபித்தனர். மேலும், குருவா பணித்தளத்தில் நடைபெற்ற ஜெபக்கூடுயிலும் 25 பேர் பங்கேற்றனர். 

🔊 முகமத்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 60 பேர் பங்கேற்றனர். ஜெப வேளையின் போது பலர் சுவிசேஷத்தை அறிவிக்கவும் மற்றும் கிறிஸ்துவின் பணிக்காகவும் தங்களை அர்ப்பணித்தனர். 

🔊 பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக, அநேக சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள் வசனங்கள் மற்றும் வேதாகம சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார்.

🔊 கிருஷ்ணநகர், பங்கட்டி, மொட்பா, உமரியா போன்ற கிராமங்களில் தீராத வியாதிகளினாலும், சாபத்தினாலும் மற்றும் அசுத்த ஆவியின் பிடியினாலும் பாதிக்கப்பட்ட பலர், ஜெபத்தின் பலனால் குணமடைந்தனர். தேவனுக்கே மகிமை!

🔊 மனிக்வார் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், சக்கரியா பணித்தளத்தில் ஆலய ஆராதனை மற்றும் விசுவாசிகளுக்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

MAY 2025

                                       தெற்கு மண்டலம்


மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரையிலான நாட்கள் ஆகாய் ஊழியர்கள் மூலமாக வாரனாசியில் நடைபெற்ற தலைவர்களுக்கான பயிற்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். தலைமைத்துவத்திற்கான பண்புகளைப் பெருக்கிக்கொள்ளவும், வசனத்தின் அடிப்படையில் முன்மாதிரியாகத் தங்களைக் காண்பிக்கவும் பங்கேற்றவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. 

பிஞ்சரடிப்பா பணித்தளத்தில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தினங்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 50 விசுவாசிகள் பங்கேற்றனர். 

போச்ரா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில் 65 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சகோ. சாம் ரிச்சர்டு, சகோதரி பூணம் ஹல்டா மற்றும் சகோதரி ஹெப்சி ஆகியோர் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளை வழங்கினர். 

வனாஞ்சல் கோட்டத்தின் லோஹிங்கா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் கூடுகையில் 50 பேர் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர். 

ராஜ்ஹரா பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும்,  தொடர்ந்து, ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபக் கூடுகையிலும் மற்றும் முகமதுகஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் உபவாசக் கூடுகையிலும் பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.

கடந்த மாதத்தில், 12 பேர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!

அன்பரா பணித்தளத்தில் பல்வேறு எதிர்ப்புகளின் நிமித்தம் ஆலய ஆராதனை தடைபட்டதைத் தொடர்ந்து, வீடுகளில் தொடங்கப்படவிருக்கும் ஜெபக்கூடுகைகளுக்காகவும் மற்றும் இப்பணித்தளத்தின் சமுதாயப் பராமரிப்பு மையத்தின் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம். 

எதிர்ப்புகளின் மத்தியிலும், லௌரி, ரீவா, உமரியா, கோன் மற்றும் சோப்பன் ஆகிய பணித்தளங்களில், 30 ஆத்துமாக்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு கிறிஸ்துவின் மந்தையில் சேர்ந்தனர்; தேவனுக்கே மகிமை! 

பணித்தளங்களில் விசுவாசிகளுக்கு உண்டாகும் நெருக்கங்கள் மற்றும் சவால்கள் மாறவும், எதிர்ப்போர் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 


April 2025

 தெற்கு மண்டலம்

 


•சத்தர்பூர், ஜப்லா, துசேரா, முகமத்கஞ்ச், நாகருந்தரி மற்றும் மஜியாவ் ஆகிய பணித்தளங்களில் சிறப்பு ஜெபக்கூடுகைகள் மற்றும் கன்வென்ஷன் கூட்டங்ககளை நடத்த கர்த்தர் கிருபைசெய்தார். இக்கூட்டங்களில், சகோ. வினைய், சகோ. கொர்நேலியுஸ், சகோ. கியான் மற்றும் சகோ. சரவணன் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர். இக்கூட்டங்களில், 600 பேர் பங்கேற்றனர்.

• மார்ச் 1 அன்று ஜப்லா மற்றும் சத்தர்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபக் கூட்டங்களில், 200 பேர் பங்கேற்று, ஊழியத்திற்காகவும், பணித்தளங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.

• துசேரா பணித்தளத்தில் மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தினங்கள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில், 150 விசுவாசிகள் பங்கேற்றனர். இக்கூட்டங்களில், சகோ. லெஸ்லின், சகோ. எடி ஜோனத்தான் மற்றும் சகோ. சரவணன் ஆகியோர் 'வேரிலிருந்து கனிகொடுங்கள்" என்ற தலைப்பின் கீழ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர்.

• மார்ச் 8 அன்று முகமத்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் 31 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. ரிச்சர்டு மற்றும் சகோ. ஜோசுவா ஆகியோர் வேதத்தின் அடிப்படையில் வாலிபர்களுக்கேற்ற ஆலோசனைகளையும் மற்றும் செய்தியையும் அளித்து, அவர்களை ஜெபத்தில் வழிநடத்தினர்.

• ஜப்லா பணித்தளத்தில் மார்ச் 19 அன்று நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் 100 பேர் பங்கேற்றனர்; இக்கூட்டத்தில், சகோ. பிரின்ஸ் தேவச் செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்.

• மார்ச் 20 அன்று முகமத்கஞ்ச், நாகருந்தரி மற்றும் மஜியாவ் பணித்தள விசுவாசிகள் 110 இணைந்து ஓரிடத்தில் தேவனை ஆராதிக்க கர்த்தர் உதவிசெய்தார்; இக்கூடுகையின்போது இயேசுவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 38 பேர் உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!

• வனாஞ்சல் கோட்டத்தின் தொர்பா, சர்ஹி மற்றும் கோமோ ஆகிய பணித்தளங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளில், 210 பேர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியினையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.

• பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், விசுவாசிகளின் சுகத்திற்காகவும் மற்றும் ஊழியத்திற்கான தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.