Jan 2026

 


ஜனவரி -  17  சித்தி பணித்தளத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூட்டத்தில் 250 பேர் பங்கேற்றனர்; சகோ. சைலஸ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பணித்தள ஊழியங்களுக்காகவும், தேசம் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் விசுவாசிகள் ஒருமனதுடன் இணைந்து ஜெபித்தனர். கர்த்தருடைய பந்தியுடன் ஆசீர்வாதமாக இக்கூட்டம் நிறைவடைந்தது. விசுவாசிகள் மத்தியில் ஜெப வாஞ்சை பெருகவும், புதிதாக ஆலய ஆராதனையில் கலந்துகொள்ளும் ஆத்துமாக்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  18  உமரியா பணித்தளத்தில் நடைபெற்ற மூன்று நாள் உபவாசக் கூடுகையில் சகோ. கயா பிரசாத் தர்வையா கலந்துகொண்டு, விசுவாசிகளை ஜெபத்தில் வழிநடத்தினார். இக்கூட்டங்களில், 159 விசுவாசிகள் பங்கேற்றனர். மேலும், மஜியாவன் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும் 180 விசுவாசிகள் பங்கேற்று தேசத்திற்காக பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தள விசுவாசிகள் விசுவாசத்தில் பெலப்படவும், பணித்தளங்களில் வாலிபர்கள் சந்திக்கப்படவும், வாலிபர் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் பலன் தரவும் ஜெபிப்போம்.  

ஜனவரி - 19 சித்தி, உமரியா, தேவ்கான் மற்றும் சத்னா ஆகிய பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 27 பேர், கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! இவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், இவர்கள் மூலமாக இவர்களது குடும்பம் மற்றும் உறவினர்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  20 பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், ஜெம்ஸ் மருத்துவ ஊழியங்கள் மூலமாக, பணித்தள மக்கள் சுமார் 2000 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையினை வழங்கவும், அவர்களுக்கு சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார். ஜெம்ஸ் மருத்துவ ஊழியங்கள் மூலமாக வரும் நாட்களில் பணித்தளங்களில் செய்யப்படவிருக்கும் இலவச மருத்துவ முகாம்களின் மூலமாக, ஜனங்கள் சரீர மற்றும் ஆத்தும விடுதலை பெற ஜெபிப்போம். 

ஜனவரி - 21  முகமத்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற GIANT கூட்டத்தில், 120 விசுவாசிகள் பங்கேற்றனர்; சகோ. ஹென்றி கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.  அவ்வாறே, ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் 30 பேரும், சுந்தர்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஜெபக்கூடுகையில் 250 பேரும் கலந்துகொண்டு பல்வேறு ஜெபக்குறிப்புகளுக்காக பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் நற்செய்திக் கூட்டங்கள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், நற்செய்தியினால் ஜனங்கள் விடுதலையடையவும் ஜெபிப்போம்.