June 2025

                                                     தெற்கு மண்டலம்



🔊தேவ்கான் பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 35 விசுவாசிகள் கலந்துகொண்டனர். திருச்சபையிலும் மற்றும் குடும்பத்திலும் பெண்கள் நிறைவேற்றவேண்டிய பங்கினைக் குறித்தும் மற்றும் சமுதாயத்தில் அவர்கள் மூலமாக  உருவாகும் தாக்கத்தினைக் குறித்தும் வேத வசனங்களின் அடிப்படையில் போதிக்கப்பட்டதுடன், வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தேவ்கான் மற்றும் சித்தி பணித்தளங்களில் நடைபெற்ற சபை மூப்பர்களுக்கான சீஷத்துவ மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கானப் பயிற்சியிலும் 80 பேர் பங்கேற்றனர். 

🔊 இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற 32 பேர், உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மீது உள்ள தங்களது அன்பையும் மற்றும் விசுவாசத்தையும் சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை!

🔊 ஹைதர்நகர்  பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கானக் கூடுகையில் 14 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, இப்பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையிலும் 28 பேர் கலந்துகொண்டு பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர்.

🔊 ஜப்லா மற்றும் சதர்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற இரவுக் கூடுகையில் 200 பேர் கலந்துகொண்டு தேசத்திற்காகவும் மற்றும் பணித்தள ஊழியங்களுக்காகவும் ஊக்கமாக ஜெபித்தனர். மேலும், குருவா பணித்தளத்தில் நடைபெற்ற ஜெபக்கூடுயிலும் 25 பேர் பங்கேற்றனர். 

🔊 முகமத்கஞ்ச் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் 60 பேர் பங்கேற்றனர். ஜெப வேளையின் போது பலர் சுவிசேஷத்தை அறிவிக்கவும் மற்றும் கிறிஸ்துவின் பணிக்காகவும் தங்களை அர்ப்பணித்தனர். 

🔊 பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக, அநேக சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள் வசனங்கள் மற்றும் வேதாகம சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார்.

🔊 கிருஷ்ணநகர், பங்கட்டி, மொட்பா, உமரியா போன்ற கிராமங்களில் தீராத வியாதிகளினாலும், சாபத்தினாலும் மற்றும் அசுத்த ஆவியின் பிடியினாலும் பாதிக்கப்பட்ட பலர், ஜெபத்தின் பலனால் குணமடைந்தனர். தேவனுக்கே மகிமை!

🔊 மனிக்வார் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், சக்கரியா பணித்தளத்தில் ஆலய ஆராதனை மற்றும் விசுவாசிகளுக்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.