August 2025

                                                       தெற்கு மண்டலம்

ஆகஸ்ட் 17 ஜார்க்கண்ட் மாநிலத்தின் கடுவா, சாங்க்ரே, தசரா, பொகாரியா, நகருந்தரி ஆகிய பணித்தளங்களிலும் மற்றும் தசரா, ஜப்லா பணித்தள பகல்நேரப் பராமரிப்பு மையங்களிலும் நடைபெற்ற சிறுவர் ஊழியத்தின் மூலம் 231 குழந்தைகளுக்கு வேதாகமக் கதைகள் மற்றும் வசனங்கள் கற்பிக்கப்பட்டன. சதர்பூரில் நடைபெற்ற மறுமலர்ச்சிக் கூட்டங்களில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், ஜப்லா பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில், சகோ.  ஸ்டீபன் மற்றும் சகோ. சரவணன் ஆகியோர் "சேவை செய்" என்ற தலைப்பில் தேவச் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர்.  

ஆகஸ்ட் 18 ஜப்லா, பர்கோஹி மற்றும் சத்தர்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் 230 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேசத்திற்காகவும், பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபித்தனர். மேலும், ஹட்டுக்டாக் மற்றும் முகமதுகஞ்ச் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 90 பேர் பங்கேற்று தேசத்திற்காக ஜெபித்தனர். இக்கூட்டங்களில், சகோ.  மகேந்தர், சகோ.  சஞ்சய் மற்றும் சகோ.  மார்ட்டின் ஆகியோர்  தேவச் செய்திகளை அளித்து ஜனங்களை ஜெபத்தில் வழி நடத்தினர்.

ஆகஸ்ட் 19 ஜப்லா, கும்லா, மெரல் மற்றும் கடுவா ஆகிய பணித்தளங்களில், சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து, இயேசுவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட 25 பேர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேல் உள்ள தங்கள் விசுவாசத்தை உடன் சகோதரருக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! 

ஆகஸ்ட் 20 புர்குண்டா பணித்தளத்தில், புதிதாக இரண்டு குடும்பங்கள் தவறாமல் ஆலய ஆராதனையில் கலந்து கொண்டு, தங்கள் விசுவாசத்தில் வளர்ந்து வருகின்றன.

ஆகஸ்ட் 21 போர்பா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபருக்கான சிறப்பு முகாமில் 80 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பாடல்கள், ஆராதனைகள், விளையாட்டுகள் மற்றும் வாலிபத்திற்கு ஏற்ற ஆலோசனைகளுடன், தேவச் செய்தியையும் ஊழியர்கள் பகிர்ந்துகொண்டனர். ஜெப வேளையின்போது, அநேக வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்ததோடு, அவருக்காக ஊழியம் செய்யவும் தங்களை அர்ப்பணித்தனர். 12 இடங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களில் வாயிலாக ஆயிரத்திற்கும் மேற்பட்டச் சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது.