ஏப்ரல் 16 'சோன்பத்ரா கோட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஊழியர் உபவாசக் குடும்பக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். தொடர்ந்து, பணித்தளங்களில் நடைபெற்றுவரும் மற்றும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஊழியங்களுக்காகவும், தேசத்திற்காகவும் தேவ சமுகத்தில் பாரத்துடன் ஜெபிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். மேலும், சித்தி பணித்தளத்தில் நடைபெற்ற மூன்று நாள் உபவாசக் கூடுகையில் 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூடுகைகளில், சகோ. பிரவீன்தாஸ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பல்வேறு பணித்தளங்களில் இன்னமும் காணப்பட்டுவரும் ஊழிய எதிர்ப்புகள் மாற ஜெபிப்போம்.
ஏப்ரல் 17 'உமரியா பணித்தள ஆலயத்தின் 7-வது ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற கூட்டங்களில், சகோ. பிரவீன்தாஸ் மற்றும் சகோ. சைலஸ் சுரேஷ் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். இக்கூட்டங்களில், 250 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, உமரியா, ராஜ்கர் மற்றும் சோன்பத்ரா பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகைகளிலும் 150 விசுவாசிகள் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் நீங்க ஜெபிப்போம்.
ஏப்ரல் 18 'உமரியா, பய்தான், சுப்சுவா, சட்கா, பஸ்தி, ரீவா மற்றும் துதி ஆகிய பணித்தளங்களில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூட்டங்களில் 404 பெண்கள் பங்கேற்றனர். மேலும், தேவ்காவ் மற்றும் சித்தி பணித்தளங்கள்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகைகளிலும் 210 பெண்கள் பங்கேற்றனர். இக்கூட்டங்களில், சகோதரி ஆல்மா கிரேஸ் தேவ வார்த்தையைப் பகிர்ந்துகொண்டதோடு, பெண்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்காக ஜெபித்தார். பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் பெண்கள் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
ஏப்ரல் 19 'மஹராஸ்டிரா கோட்டத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார்; இக்கூட்டங்களில், போதகர் சஞ்சய் பிரான்சிஸ் கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கித்தார். பலர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர்; 50 இளைஞர்கள், 20 தம்பதிகள் உட்பட 80 பேர் புதிதாக ஆலய ஆராதனையில் கலந்துகொள்ளுகின்றனர்; தேவனுக்கே மகிமை!
ஏப்ரல் 20 'சிப்லுனில் நடைபெற்ற கருத்தரங்கினையும், சாதாராவில் நடைபெற்ற குடும்பக் கூடுகையையும், இச்சல்கரஞ்ஜியில் நடைபெற்ற மூன்று நாள் ஜெபக் கூடுகையையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். கோடோலியில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 40 பேர் பங்கேற்றனர். கோடோலி பணித்தளத்தில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் உபவாசக் கூட்டத்திற்காகவும் மற்றும் வாலிபர் கூட்டங்களுக்காகவும் ஜெபிப்போம்.
